பாகிஸ்தான் – இலங்கை இடையே ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து- இரு பிரதமர்கள் முன்பு கையொப்பம்!
In ஆசிரியர் தெரிவு February 24, 2021 3:54 am GMT 0 Comments 1256 by : Litharsan
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
பிரதமர் இம்ரான் கான் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பைத் தொடர்ந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆகியோரின் முன்னிலையில் இரு நாட்டு பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையில் பின்வரும் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன,
1. பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு மற்றும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கு இடையிலான சுற்றுலா ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
2. இலங்கை சனநாயகக் சோசலிசக் குடியரசின் முதலீட்டு சபைக்கும் பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் முதலீட்டுச் சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
3. இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.டி.ஐ), மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் கராச்சி பல்கலைக்கழகம் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.
4. கொழும்பு தொழில்துறைத் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் இஸ்லாமாபாத்தின் COMSATS பல்கலைக்கழகத்திற்கு இடையிலான ஒத்துழைப்பு ஒப்பந்தம்.
5. கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் லாகூர் பொருளாதாரக் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பன கைச்சாத்திடப்பட்டுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.