பாகிஸ்தான் சுப்பர் லீக்: முல்தான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது லாகூர் அணி!
In விளையாட்டு November 16, 2020 8:05 am GMT 0 Comments 1817 by : Anojkiyan

பாகிஸ்தான் சுப்பர் லீக் ரி-20 தொடரின் இறுதிப் போட்டிக்கான இரண்டாவது வெளியேற்றுப் சுற்றுப் போட்டியில், லாகூர் குலெண்டர்ஸ் அணி 25 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
கராச்சி மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், முல்தான் சுல்தான் அணியும் லாகூர் குலெண்டர்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற முல்தான் சுல்தான் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய லாகூர் குலெண்டர்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக டேவிட் வெய்ஸ் ஆட்டமிழக்காது 48 ஓட்டங்களையும், பகர் சமான் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
முல்தான் சுல்தான் அணியின் பந்துவீச்சில், அப்ரிடி 2 விக்கெட்டுகளையும் லித், டன்வீர், இலியாஸ் மற்றும் ஜூனைத் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 183 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய முல்தான் சுல்தான் அணி, 19.1 ஓவர்கள் நிறைவில் 157 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் லாகூர் குலெண்டர்ஸ் அணி 25 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஆடம் லித் 50 ஓட்டங்களையும் குஸ்தீல் ஷா 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
லாகூர் குலெண்டர்ஸ் அணியின் பந்துவீச்சில், டேவிட் வெய்ஸ் மற்றும் ஹரிஸ் ரவூப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் தில்பார் ஹொசைன் மற்றும் ஷயீன் அப்ரிடி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஆட்டமிழக்காது 48 ஓட்டங்களையும் 3 விக்கெட்டுகளையும் சாய்த்த டேவிட் வெய்ஸ் தெரிவுசெய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த லாகூர் குலெண்டர்ஸ் அணி, நாளை கராச்சியில் நடைபெறும் இறுதிப் போட்டியில் கராச்சி கிங்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இரு அணிகளும் முதல் முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள நிலையில், இம்முறை புதிய அணியொன்று சம்பியன் கிண்ணத்தை ஏந்தவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.