பாடசாலைக்கான அதிபரை நியமிக்கக் கோரி கிளிநொச்சியில் போராட்டம்!
கிளிநொச்சி, யூனியன் குளம் பாடசாலைக்கான அதிபரை நியமிக்கக் கோரி பாடசாலை நுளைவாயிலை மூடி கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பெற்றோர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களால் இன்று (திங்கட்கிழமை) காலை பாடசாலை நுளைவாயிலை மூடி கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.
கிளிநொச்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட மிகவும் பின்தங்கிய கிராமத்தில் அமைந்துள்ள யூனியன் குளம் பாடசாலைக்கு கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக நிரந்தர அதிபர் எவரும் நியமிக்கப்படவில்லை.
இதனால், மாணவர்களின் கல்வி முதற்கொண்டு பாடசாலை அபிவிருத்தி சார்ந்த விடயங்களிலும் பின்தங்கிக் காணப்படுவதாக பெற்றோரால் பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டும், கோரிக்கைக் கடிதங்கள் அனுப்பட்டபோதும் இதுவரை குறித்த பாடசாலைக்கு அதிபர் நியமிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவ இடத்திற்குச் சென்ற கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி தற்காலிகமாக அதிபர் ஒருவரை நியமிப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.