பாடசாலை மாணவர்களுக்காக போக்குவரத்து வசதிகள்!

பாடசாலை மாணவர்களுக்காக “சிசு செரிய” பேருந்து சேவை உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
கடந்த காலங்களில் சுமார் 800 சிசு செரிய பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சிசு செரிய பேருந்து சேவைகளை மேலும் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிப்போ முகாமையாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களூடாக இணைந்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
சிசு செரிய பேருந்து சேவையை அதிகரிப்பதற்கான தேவை, ஏதேனுமொரு பாடசாலைக்கு காணப்படுமாயின் அது தொடர்பில் பிரதேசத்திற்கு பொறுப்பான டிப்போ முகாமையாளர் அல்லது பிரதான அலுவலகத்திற்கு தெரியப்படுத்துமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் 11ஆம் திகதி மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய இடங்களில் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.