பாடசாலை மாணவர்களுக்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பு
In இலங்கை January 8, 2021 6:36 am GMT 0 Comments 1876 by : Yuganthini

பாடசாலை செல்லும் மாணவர்கள், பொது போக்குவரத்தினை தவிருங்கள் என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கொரோனா தடுப்பு விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது இளங்கோவன் மேலும் கூறியுள்ளதாவது, “எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலை ஆரம்பிப்பதற்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சின் வழிகாட்டலுக்கு இணங்க பாடசாலையின் வகுப்பறைகள் மற்றும் ஏனைய செயற்பாடுகள் தொடர்பில் பாடசாலை நிர்வாகத்தினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்தோடு சுகாதார அமைச்சினால் பாடசாலை மாணவர்களின் சுகாதார நலத் திட்டங்களை மேம்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த நிதித் திட்டங்களின் ஊடாக மாணவர்களின் சுகாதார நடைமுறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அத்தோடு பாடசாலைகளில் அகச் சூழலை பொருத்தவரைக்கும் பாடசாலை வகுப்பறைகளில் இரண்டு கட்டங்களாக மாணவர்கள் பாடசாலைக்கு உள்வாங்கப்பட உள்ளார்கள்.
மேலும், சுகாதார நடைமுறைகளை பேணுவதற்கு ஏற்றவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புறசூழலைப் பொறுத்தவரை அருகில் உள்ள கடைகள் மற்றும் போக்குவரத்து போன்ற இதர செயற்பாடுகளில் சில இடர்பாடுகள் காணப்படுகின்றன.
அதிலும் குறிப்பாக பாடசாலை மாணவர்கள் பொதுப் போக்குவரத்துகளை தவிர்த்து, பெற்றோர்களின் சொந்த வாகனங்களில் மூலம் வருவதன் ஊடாக கொரோனா தொற்று ஏற்படுவதில் இருந்து மாணவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும்.
இதேவேளை நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ள பாடசாலைகள் மீண்டும் திறக்கப்பட உள்ளமையினால் பாடசாலைகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரின் ஒத்துழைப்பினை எதிர்பார்க்கின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.