அச்சுறுத்தலின்போது இராணுவம் சோதனையிடும் தந்திரோபாய முறை

சந்தேகத்துக்கு இடமான பொதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை சோதனையிடும் முறைமையை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவும் இராணுவத்தினரும் இன்று விளக்கினர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இது குறித்து தெரிவிக்கையில்,
“சந்தேகத்துக்கு இடமான பொதி, மோட்டார் சைக்கிள் தொடர்பில் தகவல் கிடைத்ததும் முதலில் அங்கு வரும் அதிரடிப் படையினர் அப்பகுதியில் இருந்து முதலில் அனைத்து பொதுமக்களையும் அப்புறப்படுத்துவர். பின்னர் எக்ஸ்ரே கதிர்வீச்சு தொழிநுட்பத்தை பயன்படுத்தி அந்த சந்தேகத்துக்கிடமான பொதியை ஆராய்வர்.
அதன் பின்னர் அப்பொதியை திறக்க Detonation எனும் முறையை பயன்படுத்துவர். இதன்போது அது வெடிப்புச் சத்தம் போன்ற சத்தத்தை தோற்றுவித்து திறந்துகொள்ளும்.
அதன்பின்னர் சோதனைகள் இடம்பெறும். அந்த சத்தத்தையே மக்கள் குண்டு வெடிப்பு என நினைக்கின்றனர்” என்றார்.
சுற்றியுள்ள உயிர்களுக்கும் அதனை சோதனையிட அனுப்பப்படுவோருக்கும் உயிர் அச்சுறுத்தலாய் விளங்கும் சந்தேகத்திற்கிடமான பொருளைக் கண்டால், அதிலிருந்து உயிர்களைக் காப்பாற்ற இராணுவ அதிகாரிகள் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையே Controlled Explosion அல்லது Detonation என அழைக்கப்படுவதாக இராணுவம் குறிப்பிடுகின்றது.
எனினும், Controlled Explosion அல்லது Detonation முன்னெடுக்கப்படும் எல்லா சந்தர்ப்பங்களும் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சந்தர்ப்பங்களாய் அர்த்தப்படாது.
அச்சுறுத்தல் விடுக்கும் சாத்தியம் இருப்பதாக நம்பப்படும் பட்சத்தில், அதிகாரிகளால் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை தந்திரோபாயமே Controlled Explosion அல்லது Detonation எனப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.