பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் தலைமையில் மட்டக்களப்பில் விசேட கூட்டம்
In இலங்கை January 26, 2021 10:03 am GMT 0 Comments 1398 by : Yuganthini

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் தலைமையில் உயர்மட்ட கூட்டமொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ன மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் விமானப்படை உலங்குவானூர்தி ஊடாக மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டு, கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் குறித்த கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக, மாவட்ட செயலகம் மற்றும் மட்டக்களப்பு நகரில் இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
பாதுகாப்பு காரணங்களுக்காக மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதுடன், பொதுமக்களும் கடும் சோதனைகளுக்கு மத்தியில் உட்செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது செய்தி சேகரிப்புக்கு சென்ற ஊடகவியலாளர்களும் திரும்பியனுப்பப்பட்டிருந்தனர். மாவட்ட செயலகத்தில் கவச வாகனம் நிறுத்தப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக எந்ததொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.