பாதுகாப்பு பிரச்சினை: இந்த வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் கூடுகின்றது
In ஆசிரியர் தெரிவு January 18, 2021 6:33 am GMT 0 Comments 1392 by : Jeyachandran Vithushan
பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாக இந்த வாரம் இரண்டு நாட்கள் மட்டுமே நாடாளுமன்றம் கூடும் என இன்று காலை இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எட்டிப்பட்டுள்ளது.
அதன்படி நாடாளுமன்றம் நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும் என நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒன்பது ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் குறித்த கூட்டம் இடம்பெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
இதனையடுத்து, சி.சி.டி.வி காட்சிகள் மூலம் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களின் நெருங்கிய தொடர்புகளை அடையாளம் காண முடிவு செய்யப்பட்டது.
அந்தவகையில் தொடர்புகள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, இந்த மாதம் 15 ஆம் திகதி 13 ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்தில் பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டன.
சுமார் 943 பேரிடம் எடுக்கப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளை அடுத்து ஐந்து நாடாளுமன்ற ஊழியர்கள் மற்றும் நான்கு பாதுகாப்புப் பணியாளர்களும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதனை அடுத்து கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவும், நாடாளுமன்ற நடவடிக்கைகளை மட்டுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.