பாறையுடன் மோதுண்ட லைபீரியக் கப்பலை மீட்டது இலங்கைக் கடற்படை!

அபுதாபியில் இருந்து இலங்கையின் திருகோணமலைத் துறைமுகம் நோக்கிச் சென்ற லைபீரியக் கப்பலான எம்.வி.யுரோசன், திருகோணமலைத் துறைமுகத்தை அண்மித்து விபத்துக்குள்ளானது.
திருகோணமலை துறைமுகத்திலிருந்து சுமார் 10 கடல் மைல் தொலைவில் உள்ள சின்ன இராவணா கோட்டை கடற்பரப்பில் பாறையொன்றில் மோதி சிக்குண்டுடிருந்த குறித்த கப்பலை இலங்கைக் கடற்படை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் மீட்டுள்ளது.
கப்பலில் சீமெந்து உற்பத்திக்குப் பயன்படுத்தும் கிளிங்கர் திரவம் 33 ஆயிரம் தொன்னும், 720 மெற்றிக் தொன் டீசலும் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தது.
மேற்கு ஆபிரிக்க நாடான லைபீரியாவின் கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள எம்.வி. யுரோசன் சரக்குக் கப்பல், கடந்த ஜனவரி எட்டாம் திகதி அபுதாபியில் இருந்து சீமெந்துக்கான திரவ பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களுடன் இலங்கையின் திருகோணமலைத் துறைமுகத்தை நோக்கிப் பயணமாகியது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நண்பகல் சின்ன இராவணா கோட்டைக் கடற்பரப்பில் ஆழமற்ற நீரோட்டத்தில் பயணித்த நிலையில் சுண்ணாம்பு பாறைகளில் மோதியதுடன் கப்பலின் கீழ் தளம் பாறை ஒன்றில் சிக்குண்டதை அடுத்து கப்பலை நகர்த்த முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது.
இதையடுத்து, நேற்று பிற்பகல் வேளையில் இலங்கைக் கடற்படையினர் குறித்த கப்பலை மீட்டு அந்த இடத்தை விட்டு நகர்த்தியுள்ளனர். இந்நிலையில், கப்பலில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பொருட்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என கடற்படையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.