பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை…. இந்திய அரசியலின் மற்றொரு நகைமுரண்
May 7, 2018 2:19 pm GMT
ஒரு அதிகார நிறுவனம், தான் குற்றவாளியாக காணும் ஒருவருக்கு தனது நடவடிக்கைகளூடாக அவரது உயிர் வாழ்வைப் பறிக்கும் ஒரு நடை முறையே மரணதண்டனை எனப்படுகிறது. ஒரு மனிதன் இழைக்கும் குற்றம் அல்லது தவறு அவரின் உடல் சார்ந்த செயல் பாடாகப் புரிந்துகொள்ளப்பட்ட தொன்மைக்கால தண்டனை முறைகளில் இதுவும் ஒன்றாகும்.
அனைத்து நாடுகளிலுமே கொலைக்கு மரண தண்டனை விதிக்கப்படுதல் என்பது ஏதேனும் ஒரு காலப்பகுதியில் இடம் பெற்றாலும் இத் தண்டனை நிறைவேற்றப்படும் முறை நாட்டுக்கு நாடும், காலத்துக்குக் காலமும் வேறுபாடாக இருந்து வந்துள்ளதாக வரலாற்று குறிப்புகள் தெரிவிகின்றன
“கண்ணுக்கு கண் எனின் மொத்த உலகே இருண்டு விடும் .(An eye for an eye makes the whole world Blind)”,என்பது அண்ணல் காந்திஜியின் காந்த வரிகள். இதனையும் புறந்தள்ளி அந்த காந்தி பிறந்த மண்ணிலும் மரண தண்டனை என்பது அன்றுமுதல் இன்றுவரை நடை முறையில் உள்ளது.
ஆனால் இந்தியாவின் மரண தண்டனை வரையறைக்குள் பெண்கள் மீதான குறிப்பாக சிறுமிகள் மீதான பலாத்காரம் உள்ளடக்கப் படுகிறதா…? என்றால் அது சர்ச்சைக்கு உரியதாகவே இருந்தது.
இன்றைய இந்தியாவின் பிரதான, அடிக்கடி அரங்கேறும் குற்றமான இந்தக் கொடுரத்தை அரங்கேற்றுபவர்களை இன்றைய சட்டத்தின் ஓட்டைகளை தெரிந்து வைத்துள்ள சட்ட வல்லுனர்கள் சுலபமாக தப்பிக்க வைத்து விடுகிறார்கள்.
வன்மத்தின் உச்சக்கட்டமாக நிகழும் இது போன்ற சம்பவங்களுக்கு சட்டங்கள் மூலமே தீர்வு காணமுடியும். கொடிய குற்றங்களை புரிவோருக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என எதிர்கட்சிகளும், பல்வேறு பொது அமைப்புகளும் எழுப்பிய குரல் இப்போது சட்டமாக உருவெடுத் திருக்கிறது.
சட்டத்தின் சிறப்பு ஏற்பாடாக பன்னிரண்டு வயது வரையிலான சிறுமிகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனைக்கான அவசரச் சட்டம் கடந்த வாரம் இந்திய நாடாளமன்றில் நிறை வேற்றப்பட்டு அமுலுக்கு வந்திருக்கிறது.
சிறுமிகள் பாலியல் வன்முறை தொடர்பான சம்பவங்களை விசாரிக்க மாநில அரசுகள், உயர்நீதிமன்றங்கள் ஆகியவற்றின் ஆலோசனைப்படி புதிதாக விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும், ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்புத் தடயவியல் பரிசோதனை மையங்கள் அமைக்கப்படும் போன்ற சரத்துக்களும் இந்த அவசர சட்டத்தில் உள்ளடக்கப் பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது .
தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின் படி, சிறார்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கும் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் குறைந்த பட்சமாக ஏழாண்டுவரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படுகிறது.
சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றச் சம்பவங்களில் 2 மாதங்களில் வழக்கு விசாரணை முடிக்கப்பட வேண்டு மென்றும், மேல் முறையீட்டு வழக்கு ஆறு மாதங்களில் முடிக்கப்பட வேண்டுமென்றும் தெரிவிக்கிறது புதிய சட்டம். சிறுமிகளை பலாத்காரம் செய்யும் கொடூரர்களுக்கு வழக்கு முடியும் வரை பிணை கிடையாது என்பதும் பருவம் அறியாத சிறுமிகளுக்கு புதிய சட்டம் வழங்கும் பாதுகாப்பு அரணாகும்.
மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டு இந்திய குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றுள்ள இந்த அவசர சட்டம் பெண்கள் பாதுகாப்புக்கு அவசர தேவை என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. எனினும் இந்த சட்ட இறுக்கங்கள் மட்டும் இது போன்ற கொடூரங்களை தடுத்து நிறுத்தி விடுமா …?என்கின்ற நியாயமான கேள்விகளும் எழுப்பப் படுகின்றன.
திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்கின்ற பட்டுக்கோட்டை யாரின் பாடல் வரிகளே நினைவுக்கு வருகிறது.
இத்தகைய கொடூர செயல்களின் தோற்றுவாயை கண்டறிந்து இளம் சமூகத்தை மனதளவில் பக்குவப்படுத்துவதும் அவசியம். பள்ளிகளில் முன்பு போல நீதிபோதனை வகுப்புகளுக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
செல்போனும் கையுமாக அணிவகுக்கும் இன்றைய இளைய தலைமுறைக்கு, மன ரீதியிலான ஆற்றுப்படுத்துதலை வகுப்புகளில் வழங்குவதும் ஒரு தீர்வாகும். அனைத்தையும் தாண்டி இன்றைய உலகின் ஒரே நடை முறையான இந்தச் சட்டங்களை நம்புவதை தவிர வேறு மார்க்கம் இல்லை இவ் உலகுக்கு.
இந்திய அரசின் புதிய இச்சட்டத்தை அமல்படுத்துகிறபோது வேறு சில காரணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்கிறார்கள் சட்ட வல்லுனர்கள் . இந்தியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்படும் குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகம்.
ஆனால் தூக்கில் போடப்பட்டவர்கள் எண்ணிக்கை குறைவு. ஜனாதிபதிக்கு கருணை மனு என்பது குற்றவாளிகளுக்கு தரப்படும் மற்றொரு வாய்ப்பாகும். பாலியல் வழக்கில் குற்றவாளிகள் இதை வைத்தே காலம் கடத்தி தப்பித்து செல்லும் வாய்ப்புகளும் அதிகம். மேலும் இத்தகைய சட்டத்தை பழிவாங்கும் போக்கில் பயன்படுத்தும் சந்தர்ப்பங்களையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்கிறனர் அவர்கள். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என்பதற்காக விசாரணையை துரிதகதியில் நடத்தும் காவல்துறையும் தடம் புரளக்கூடாது.
அதேவளை விசாரணை நடைமுறைகளை பலப்படுத்தாமலும், பாதிக்கப்பட்டவருக்கு நீதிமன்றத்திலும் வெளியிலும் சாதகமான சூழலை உருவாக்காமலும் தண்டனையைக் கடுமையாக்குவதால் மட்டும் பலன் ஏற்பட்டுவிடப் போவதில்லை.
2012ம் ஆண்டு இடம் பெற்ற டில்லி கூட்டு பாலியல் வன்முறை வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கியும்கூட, பாலியல் வன்முறை சம்பவங்கள் குறையவில்லை என்பதிலிருந்து மரண தண்டனை இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக இருக்க முடியாது என வாதிடுவர்களும் உள்ளனர்.
அதேவேளை இன்றைய இந்தியாவின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களும் 48 சட்டப்பேரவை உறுப்பினர்களும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்டவர்கள் எனத் தேரி விக்கிறது 2017இல் மேற்கொள்ளபட்ட ஓர் ஆய்வு.
அரசியல் கட்சிகள் இதுபோன்ற வழக்குகளை எதிர்கொள்ளும் 334 குற்றவாளிகளுக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்திருக்கின்றன கடந்த தேர்தலில். .
இந்தப் பின்னணியில், சிறுமிகள் பாதுகாப்புச் சட்டத்தில், பாலியல் வன்முறையாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் திருத்தத்தை அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் கொண்டு வந்திருப்பதனை இந்தியாவின் மற்றொரு நகை முரணாகவே பார்க்க வேண்டும்.
-
தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கவேண்டும்
ஈழத் தமிழ்ச் சொந்தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்...
-
அபிநந்தன் விடுதலையும்… அரசியல் சதுரங்கமும்…
-ஆண்டாள்- இந்திய பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய ...