பாலியல் வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு போதாது- ஒக்ஸ்ஃபாம் இந்தியா

இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்துப் போராடுவதற்கான அரச செலவினம் போதுமானதாக இல்லையென ஒக்ஸ்ஃபாம் இந்தியா தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மத்திய வரவு செலவுத் திட்டத்தை ஆராய்ந்த பின்னர், நிதி ஒதுக்கீடு போதாமை குறித்து ஒக்ஸ்ஃபாம் இந்தியாவின் பாலின நீதிக்கான முன்னணி நிபுணர் அமிதா பித்ரே தோம்சன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உதவித் தொடர்புகளை அமைப்பதற்கும், பாதுகாப்பு மையங்களைத் திறப்பதற்கும், அதிகாரிகளுக்கு பாலினம் குறித்த பயிற்சியை அறிமுகப்படுத்துவதற்கும் ஒதுக்கப்பட்ட நிதி செலவழிக்கப்படவில்லையென அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெண்களின் பாதுகாப்பை உயர்த்துவதற்காக, நாட்டின் வரவு செலவுத் திட்டத்தில் உள்ள திட்டங்களை பகுப்பாய்வு செய்து சில விடயங்களை குறித்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, 2012ஆம் ஆண்டில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிர்பயாவின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்திற்கு நிதி மற்றும் வளங்கள் குறைவாகக் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கு ஒரு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறுவதாக கணிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் வரவு செலவுத் திட்டத்தை பகுப்பாய்வு செய்தால், பாலின அடிப்படையிலான வன்முறையை எதிர்த்துப் போராடுவதற்காக ஒரு பெண்ணுக்கு இந்திய மதிப்பில் 30 ரூபாயே செலவழிக்கப்படுகிறது என்பது சுட்டிக்காட்டப்படுகிறது.
அத்துடன், பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட 80 மில்லியன் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடானது, பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 102 ரூபாயே ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துக்கான இந்தியாவின் அமைச்சகம் இந்த விடயம் குறித்து பதில் எதுவும் வழங்கவில்லை.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.