பிள்ளையான் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுதலை
In ஆசிரியர் தெரிவு November 24, 2020 8:54 am GMT 0 Comments 1693 by : Yuganthini
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப்புலனாய்வு உத்தியோகஸ்தரான எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோரையும் தலா 2 சரீரப்பிணையில் மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.
பிள்ளையான் உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்கள், மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐவரின் பிணை மனு கோரிக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த பிணை மனுவினை ஆராய்ந்த மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன், அவர்கள் அனைவருக்கும் பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும், குறித்த வழக்கு விசாரணைகளை எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதிபதி அறிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பாகவே சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐவரும் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015 ஆண்டு கைது செய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.