பிரெக்சிற் வர்த்தக பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டுள்ளது – பார்னியர்
In இங்கிலாந்து December 5, 2020 5:29 am GMT 0 Comments 1817 by : Jeyachandran Vithushan

பிரெக்சிற் வர்த்தக பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை பேச்சாளர் மைக்கல் பார்னியர் தெரிவித்துள்ளார்.
வெள்ளியன்று பிரஸ்ஸல்ஸும் லண்டனும் ஒரு உடன்பாட்டை எட்டத் தவறியதை அடுத்து பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ள மைக்கல் பார்னியர், தானும் பிரித்தானியத் தலைமை வர்த்தக பேச்சாளரும் இதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தைகளில் இந்த இடைநிறுத்தம் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்கான தாமதத்தை மேலும் நீடித்துள்ளது.
ஆரம்பத்தில், ஒக்டோபர் மாதத்திற்குள் பேச்சுவார்த்தையை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்ட போதும் இந்த காலக்கெடு தவறவிடப்பட்டு நவம்பர் நடுப்பகுதியில் ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்ய இரு தரப்பும் முடிவு செய்தது.
இந்த பேச்சுவார்த்தைகளின் ஒரு முக்கியமான கட்டம் தற்போது இடம்பெற்று வரும் நிலையில் பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் வெள்ளிக்கிழமைக்குள் ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்யும் என்று நம்பப்பட்டது.
இந்நிலையில் இரு தரப்பிற்கும் இடையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டி, பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக மைக்கல் பார்னியர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பொரிஸ் ஜோன்சன் மற்றும் ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா வன் டெர் லேயன் ஆகியோர் பிரெக்சிற்டுக்கு பிந்தைய வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.