பிரெக்ஸிற்றை நிறைவேற்ற தொழிற்கட்சியின் ஆதரவே ஒரே வழி! – பிரதமர் மே
In இங்கிலாந்து April 7, 2019 4:34 am GMT 0 Comments 2822 by : Varshini
பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் ஆதரவுடன் பிரெக்ஸிற் தீர்மானத்தை நிறைவேற்றுவதே ஒரே வழியென பிரதமர் தெரேசா மே குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறில்லாவிட்டால் பிரெக்ஸிற்றை இழக்கும் நிலை ஏற்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரெக்ஸிற் தொடர்பாக பிரதமரின் கொன்சர்வேற்றிவ் கட்சியிலேயே முரண்பாடுகள் ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையொன்றில் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை மூன்று தடவைகள் பிரித்தானிய நாடாளுன்றம் நிராகரித்துவிட்டது. உடன்பாடற்ற பிரெக்ஸிற்றை எதிர்ப்பதாக நாடாளுமன்றம் கூறிவிட்டது. இந்நிலையில், தொழிற்கட்சியுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றிக்கொள்வதே இப்போது காணப்படும் ஒரே வழியென பிரதமர் கூறியுள்ளார்.
கொன்சர்வேற்றிவ் கட்சி மற்றும் ஜனநாயக ஒன்றிய கட்சியின் ஆதரவுடன் பெரும்பான்மையை பெற முடியாவிட்டால் நாடாளுமன்றில் பிரெக்ஸிற் திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள முடியாது. இந்நிலையில், தேசிய நலன்கருதி தொழிற்கட்சியுடன் இணைந்து இத்திட்டத்தை நிறைவேற்றிக்கொள்வது அவசியம் என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரெக்ஸிற் தொடர்பாக அரசாங்கத்திற்கும் தொழிற்கட்சிக்கும் இடையில் கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.