பிரெக்ஸிற்: ஒரு வருட தாமதம் சாத்தியம் – டொனால்ட் ரஸ்க்
In இங்கிலாந்து April 10, 2019 10:26 am GMT 0 Comments 2746 by : shiyani

பிரெக்ஸிற்றை மேலும் ஒருவருட காலத்துக்கு பிற்போடுவதற்கு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் சம்மதிக்க வேண்டுமென ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்ட் ரஸ்க் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் தெரேசா மே-யினால் முன்வைக்கப்பட்டுள்ள ஜூன் 30 வரையிலான தாமத காலத்துக்குள் ஒப்பந்தமொன்றை எட்டமுடியுமென தமக்கு நம்பிக்கையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் எந்தவொரு பிரெக்ஸிற் தாமதமும் நிபந்தனைகளுடன் வழங்கப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு ஐரோப்பிய கவுன்சில் தலைவரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் தெரேசா மே-யினால் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள குறுகியகால பிரெக்ஸிற் தாமதத்துக்கான கோரிக்கை மேலதிக குறுகிய நீடிப்புகளுக்கும் அவசர உச்சிமாநாடுகளுக்கும் வழிவகுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரெக்ஸிற்றை பிற்போடுவதற்கு ஐரோப்பிய கவுன்சில் உடன்படவில்லை என்றால் உடன்பாடற்ற பிரெக்ஸிற் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டாகுமெனவும் ரஸ்க் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிரித்தானியாவை மிக உயர்ந்த மரியாதையுடன் நடத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ள ரஸ்க் எந்தவொரு தரப்பும் அவமானத்துக்கு உள்ளாகக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.