பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் 81 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புக்குழுவின் இயக்குநர் ரிக்கார்டோ சலட் தெரிவித்துள்ளார்.
மேலும் நிலநடுக்கம் சார்ந்த விபத்துகளில் காணாமற்போன 14 பேரை இடிபாடுகளுக்கு இடையில் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழப்பு – (முதலாம் இணைப்பு)
பிலிப்பைன்ஸின் லூஸொன் தீவை தாக்கிய சக்திமிக்க நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நேரப்படி நேற்று மாலை 5.10 மணியளவில் 6.1 அளவில் குறித்த நிலநடுக்கம் பதிவானது. சேத விபரங்கள் தொடர்பாக உடனடி தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில் தற்போது 8 பேர் வரை உயிரிழந்ததாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிளார்க் சர்வதேச விமான நிலையம் பாரிய சேதங்களுக்கு உள்ளான அதேவேளை, இரண்டு கட்டிடங்கள் முற்றாக சேதமடைந்துள்ளன. குறிப்பாக பம்பன்ஸ் மாகாணத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது.
தலைநகர் மணிலாவின் வடமேற்கு பகுதியிலுள்ள குறித்த மாகாணமே அதிக பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. அங்கு சுமார் 20 பேர் காயமடைந்துள்ளதாக மாகாண ஆளுநர் லிலியா பினெடா தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களுக்கு தொடர்ச்சியாக பல அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. இதனால் மக்கள் வீடுகளையும் கட்டிடங்களையும் விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.