‘பி.எம். நரேந்திர மோடி’ படத்தை வெளியிடத் தடை

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கையை விளக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள ‘பி.எம். நரேந்திர மோடி’ எனும் திரைப்படத்தை தேர்தல் முடியும் வரை வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையம் இன்று (புதன்கிழமை) அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், குறித்த திரைப்படம் நாளை வெளியாகவிருந்த சூழலில் இந்தத் தடை உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், “தேர்தல் நேரத்தில் எந்த அரசியல் கட்சி குறித்தும், அரசியல் கட்சியோடு தொடர்புடைய எந்த தனிமனிதர் குறித்த வரலாற்றுத் திரைப்படம் திரையிடுவது, வெளியிடுவது, மக்களைப் பாதிக்கும்.
ஆதலால், எந்த மின்னணு ஊடகங்களிலும் தேர்தல் முடியும் வரை ‘பி.எம். நரேந்திர மோடி’ திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்கிறோம். இது தொடர்பாக வரும் முறைப்பாடுகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் அல்லது உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் விசாரணை நடத்துவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கம் வகையில் ‘பி.எம். நரேந்திர மோடி’ எனும் திரைப்படத்தை சந்தீப் சிங் என்பவர் தயாரித்துள்ளார். ஓமங்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் நரேந்திர மோடி பாத்திரத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார்.
இப்படம் தேர்தல் நேரத்தில் திரையிடப்படுவதாலும், தேர்தலில் மக்களைப் பாதிக்கும் வகையில் சில காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
இப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி மும்பை, டெல்லி, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றங்களில் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், இப்படத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. தேர்தல் ஆணையத்தை அணுகுமாறு மனுதாரர்களுக்கு உத்தரவிட்டது.
இதனிடையே, திரைப்படம் கடந்த 5ஆம் திகதி திரையிடுவதாக இருந்த நிலையில் வெளியீடு 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், ‘பி.எம். நரேந்திர மோடி’ திரைப்படத்துக்கு ‘யூ’ சான்றிதழ் அளித்தது. இதனால், இத்திரைப்படம் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தேர்தல் ஆணையம் இன்று பிறப்பித்த உத்தரவில், தேர்தல் முடியும் வரை திரைப்படத்தைத் திரையிடத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.