பீகாரில் பா.ஜ.க.கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று
In இந்தியா November 15, 2020 4:27 am GMT 0 Comments 1577 by : Yuganthini

பீகாரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க.கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கின்றது.
பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாக நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தனதாக்கி கொண்டது.
இந்த தேர்தலில் பா.ஜ.க. 74 இடங்களில் வென்று இரண்டாவது தனிப்பெரும் கட்சியாக வந்தது. அதன் கூட்டணி கட்சிகளான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும், வி.ஐ.பி. மற்றும் எச்.ஏ.எம்.எஸ். கட்சிகள் தலா 4 இடங்களிலும் வெற்றி பெற்றன.
சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை விட 31சட்டமன்ற உறுப்பினர்களும் குறைவாக வாக்குகளை பெற்றிருந்தாலும், ஏற்கனவே அந்த கட்சியின் தலைமை அளித்த வாக்குறுதியின்படி ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் தான் முதலமைச்சர் பதவியை ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, நேற்று முன்தினம், மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில் தற்போதைய சட்டசபையை கலைக்க ஆளுநருக்கு சிபாரிசு செய்வது என முடிவு எடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஆளுநர் பாகு சவுகானை நிதிஷ்குமார் சந்தித்து, தனது மந்திரி சபையின் இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். மேலும், சட்டசபையை கலைக்கக் கோரும் சிபாரிசை அளித்தார்.
நிதிஷ்குமாரின் இராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். புதிய அரசு பதவி ஏற்கும்வரை இடைக்கால முதலமைச்சராக நீடிக்குமாறு நிதிஷ்குமாரை கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், பாட்னாவில் நிதிஷ்குமார் இல்லத்தில் பா.ஜ.க.கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் சட்டசபை பா.ஜ.க. கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை இன்று மதியம் 12.30 மணிக்கு நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.