புகழை பறிக்கும் மது
January 20, 2018 8:12 pm GMT
அன்றைய பணிகள் முடித்து தலையணையில் தலை புதைத்து உடலுக்கு ஓய்வளித்து கண்ணயர்ந்தான் கபிலன்.
உச்ச ராத்திரியில் தலைநகரே அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தது. அசரீதியுணர்ந்தவனாய் தலைநிமிர்ந்தான்.
“யார் நீ”
சுற்றி நின்றன பல உருவங்கள், சீருடையில் சில உருவங்கள். அனைத்து கரங்களும் குறி பார்த்தன கபிலனை.
“அதட்டலான வினாவிற்கு பதில் சொல்வதா? அல்லது தலையணைக்குள் தயாராய் நிற்கும் துப்பாக்கியை உருவி போரிடுவதா?” கபிலனின் சிந்தனை செல்லும் திசை புரிந்து கொண்டவனாய் கர்சித்தான் அவர்களில் ஒருவன்.
“கைத் துப்பாக்கியை எடுக்க நினைக்கிறாய் என்றால், உன் கடைசி நொடிகளை எண்கிறாய் என்றுதான் பொருள். வீரத்திற்கு விடை கொடு. விவேகத்திற்கு வேலை கொடு! தலையணைக்குள் கைகளை புகுத்துவதைவிட, எம் உத்தரவிற்கு தலையசைப்பதே புத்திசாதுரியம்”
கபிலன் உடன்பட்டான். தலைநகரின் புறநகரில் தனித்திருந்த மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.
“வீண் வீம்பு பண்ணாதே மறைவிடத்தை சொல்லிவிடு” என்றான் விசாரணை அதிகாரி.
“என்ன மறைவிடம்?” என்றான் கபிலன்.
“வானுயர்ந்த மாளிகைக்குள் உள்நுழைந்து பிரகண்டம் பண்ணுவதுதான் அடுத்த திட்டம் என்பது வெட்ட வெளிச்சம். அதற்கான ஏற்பாடுகள் எங்கே என்பதுதான் என் வினா? ”
கபிலன் திகைத்தான். திட்டம் கசிந்த திசை தொடர்பில் சிந்தித்தான்.
“என்ன யோசனை? ஊள்நுழைந்து புலன் பார்ப்பதில் நம்மவர்களும் கில்லாடிகள் தானடா!”
கபிலன் சிந்தித்தான் – திடம் கொண்டான். “எனக்கு ஒன்றும் தெரியாது”
விசாரணை அதிகாரியின் இரண்டு விழிகளும் கோபத்தில் கொவ்வைப் பழத்தின் நிறத்தை விஞ்சின.
“நன்றாக நடிக்கிறாய். உனக்கு தெரியும் என்பது எமக்கு நன்றாகவே தெரியும்”
“எனக்கா.. சத்தியமாய் தெரியாது” அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டான் கபிலன்.
“உங்களின் சத்தியத்தை நாங்கள் நம்புவதில்லை”
“நம்புவதும் விடுவதும் உங்கள் தீர்மானம்” அமைதியாய் ஆனால் உறுதியாய் கபிலனின் உதடுகள் சொற்களை உமிழ்ந்தன.
அவன் குரலில் இருந்த உறுதி விசாரணை அதிகாரியை வியக்க வைக்கவில்லை. ஏற்கனவே ஊரறிந்த மனவுறுதிதான் கபலினுடையதும்!
“இரவு இங்கே தங்கியிருக்கலாம் – களித்திருக்கலாம். விசாரணை இருக்காது. வெளியே மட்டும் காவலிருக்கும்” விசாரணை அதிகாரி சென்று விட்டான்.
சிறிது நேரத்தில் விருந்து பரிமாறப்பட்டது. பரிமாறியது பருவ இளம் பாவையர்கள். குனிந்து குனிந்து விருந்து படைகையிலே எழில் உருவக் கோலம் காட்டினார்கள். வழிக்கு கொண்டுவர குசும்பு பண்ணினார்கள்.
“மார்பெழில் காட்டி மனதை மயக்கி, மஞ்சத்தில் வைத்து பொன்னெழில் காட்டி ரகசியம் அறியும் கபட நாடம். நானோ விழுவேன்? உருண்டு திரண்டு மிரட்டும் மொட்டுக்கள் என் சித்தத்தை எப்படி வெல்ல முடியும்?”
கபிலன் தனது உறுதியை நினைத்து இறுமாப்புக் கொண்டான். அறுசுவை உணவை உண்ட திருப்தியில் இருக்கையில், சயன அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.
“வருக கபிலா.. வருக!” அழைத்தது பெண்தான். ஆனால் அபாயமான பெண். காளையர்களுக்கு பொறி வைக்கும் விதமாய் இறுக்கிச் சுற்றப்பட்ட சேலைக்குள் புகுந்திருந்தாள் அவள். ஏழில் பிரதேசங்களை எடுப்பாய் காட்டியது அவளது சேலையணிந்த பாங்கு.
சுல் என அழைக்கும் வாசனைப் பூச்சும் கண்களுக்குள் மஞ்சத்தை விரித்துக்காட்டும் மதனப்பார்வையும் அழைத்தவள் தகுதியை கபிலனுக்கு உணர்த்தியது.
“மது தரவா? – மதுவாய் வரவா?” கண் சிமிட்டினாள். கபிலனின் மனதை சுருட்டினாள்
“மது போதும்”
மதுவும் மாதுவும் கிட்டவும் கூடாது என்பது அவனின் அடிப்படை உறுதியாய் இருப்பினும், தலைநகரில் சுயம் மறைத்து காரியம் ஆற்ற வேண்டிய வேளைகளில் மதுவின் சுவையறிந்திருக்கிறான். பிடித்தான் ஒரு பிடி.
“இன்னும் ஊற்றடி”
“ஊற்றுவதற்கு இன்னும் இல்லை. ஊறுகிற மதுதான் இருக்கிறது. நிற்கவா – போகவா?”
“நில்லடி பாதியில் போனால் எப்படி?”
“பருக இருப்பது வேறென்ன சொல்லடி”
“பருவம் உள்ளது – பருக நல்லது. பருகலாம் – இன்ப வானில் பறக்கலாம் – சுவைக்கலாம். அள்ளித்தரவா அல்லது தள்ளிப் போகவா”
“என்னடி உளறல்”
“உளறல் அல்ல. என் வாய் வீச்சில் உன் உறுதி கந்தலாகும் பார்” இதழ்களினால் அவன் அவன் உதடுகளை ஆக்கிரமித்தாள்.
மதுவெறியும் மாதுவின் களிப்பு வெறியும் காளையின் உறுதியை நொருக்கியது. மறைவிடத்தின் ரகசியத்தை உளற வைத்தன.
விடிந்தபோது உண்மை புரிந்தது. உறுதி குலையாத இலட்சிய வீரன் என்ற புகழும் மறைந்தது. தலைநகரை அதிர வைத்த படை தலைவன் ஒரு குவளை மதுவால் வீழ்த்தப்பட்டான்.
சித்தம் தெளிவாக இருந்தபோது, கொதுத்தும் விழிகளும் குத்தும் எழில்களும் வீழ்த்த முடியாத உரமேறிய மனதை ஒரு குவளை மது சேறாக்கியது.
தலையில் அடித்துக் கொண்டான் கபிலன். அந்த மாளிகை அதிரக் கத்தினான்.
இதனைத்தான் வள்ளுவர் தன்னுடைய 921 ஆவது குறலில கூறுகிறார் “கள்மேல் காதல் கொண்டவரைக் கண்டால் பகைவரும் அஞ்சார். கள் வெறி கொண்டோர் புகழையும் இழப்பர்” என்கிறார்.
“உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்,
கட்காதல் கொண்டொழுகு வார்”
(யாவும் கற்பனை)
-
கண்கள் கேட்ட வரம்!
காதல் வானில் கண்கள்தான் கௌரவத்துக்குரியவை! இதழ்கள்...
-
புத்தகப் பிரியன் அனலனின் காதல்…
ஒற்றைப் பாதை நீண்ட தூரப் பயணப்பட்ட கால்கள் ஓய்வு த...