புட்டின் – கிம் ஜொங் உன் சந்திப்பு இம்மாத இறுதியில்

ரஷ்ய அதிபர் புட்டினுக்கும் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது.
இச்சந்திப்பு ரஷ்யாவில் இம்மாத இறுதியில் இடம்பெறவுள்ளதாக கிரம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.
அணுவாயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் மூலம் உலக நாடுகளை வடகொரியா அச்சுறுத்தி வந்தது. இதனால் வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்தது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் சந்தித்து பேசிய பிறகு, இந்த சூழல் மாறியது. வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நிறுத்தி அமைதிக்கு திரும்பியதை சர்வதேச நாடுகள் வரவேற்றன.
இதனிடையே, ட்ரம்ப் – கிம் ஆகியோரின் 2 ஆவது சந்திப்பு தோல்வியில் முடிந்ததால் வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு திரும்பிவிடுமோ என்கிற அச்சம் எழுந்துள்ளது. இது குறித்து பேசித் தீர்வுகாண 3ஆவது உச்சி மாநாட்டுக்கு இருநாட்டுத் தலைவர்களும் பரஸ்பர விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புட்டினும், வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னும் சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல் வெளியானது. அந்தவகையில், இருவரது சந்திப்பு இம்மாத இறுதியில் நடைபெறவுள்ளதாக கிரம்ளின் மாளிகை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.