புதிய பொலிஸ்மா அதிபர் பிரதமருடன் சந்திப்பு
In இலங்கை November 30, 2020 6:30 am GMT 0 Comments 1395 by : Yuganthini

நாட்டின் 35ஆவது பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து சி.டீ.விக்ரமரத்ன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து, தனது சேவை குறித்து கலந்துரையாடியுள்ளார்.
இன்று (திங்கட்கிழமை) முற்பகல், விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, புதிய பொலிஸ்மா அதிபருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாட்டின் பாதுகாப்பு நிலைமை மற்றும் பொலிஸ் துறையின் தற்போதைய பணிகள் என்பன குறித்தும் கேட்டறிந்தார்.
இலங்கை பொலிஸ் துறையை முன்னோக்கி கொண்டு செல்லல், தேசிய ரீதியிலான பொறுப்புகளை தவறாது செயற்படுத்துதல் என்பன தொடர்பில் புதிய பொலிஸ்மா அதிபர் நம்பிக்கை வெளியிட்டார்.
நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் கொவிட்-19 தொற்று நிலைமையிலிருந்து இலங்கை மக்களை பாதுகாப்பதற்கு இலங்கை பொலிஸ் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் பாராட்டு தெரிவித்தார்.
1986ஆம் ஆண்டு உதவி பொலிஸ் அதிகாரியாக சேவையில் இணைந்த சி.டீ.விக்ரமரத்ன, கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பட்டம் பெற்றவராவார்.
பிரேட்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஹாவர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் முதுகலை டிப்ளோமா பெற்றுள்ள சி.டீ.விக்ரமரத்ன, இதற்கு முன்னர் 13 தடவைகள் பதில் பொலிஸ்மா அதிபராக பணியாற்றியுள்ளார்.
சி.டீ.விக்ரமரத்ன, 13 வெளிநாட்டு கற்கைநெறிகளை நிறைவுசெய்துள்ளார். இந்தியா, பிரித்தானியா, ஜப்பான், சிங்கப்பூர், பிரேசில், மியன்மார் ஆகிய நாடுகளில் மனித வள முகாமைத்துவம், உளவுத்துறை, பொது பொலிஸ்துறை, பயங்கரவாதத்தை தடுத்தல், போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்தல் ஆகிய துறைகளில் கற்கைநெறிகளை மேற்கொண்டுள்ளார்.
இலங்கை பொலிஸ் வரலாற்றில் அதிக காலம் பதில் பொலிஸ்மா அதிபராக சேவையாற்றிய சி.டீ.விக்ரமரத்ன, பொலிஸ் வரலாற்றில் இடம்பிடித்துள்ள அதிகாரியாவார். அத்துடன், இலங்கை பொலிஸ் வரலாற்றில் புலனாய்வு அதிகாரியொருவர் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
சி.டீ.விக்ரமரத்ன, முப்பது ஆண்டுகால யுத்தத்தை நிறைவுசெய்யும் மனிதாபிமான நடவடிக்கையில் மிகுந்த பங்களிப்பு செலுத்தியவராவார். அவர் நுகேகொட புனித ஜோன் கல்லூரி, மஹனாம கல்லூரி மற்றும் கொழும்பு ஆனந்தா கல்லூரி என்பவற்றின் பழைய மாணவர் ஆவார். இதன்போது புதிய பொலிஸ்மா அதிபரினால் பிரதமருக்கு நினைவு பரிசொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.