புதிய முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் ஆரம்பம்
In இலங்கை January 21, 2021 3:12 am GMT 0 Comments 1452 by : Dhackshala
யாழ்.பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் நேற்று (புதன்கிழமை) பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டன.
யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி கடந்த 8ஆம் திகதி இரவு பல்கலைக்கழக நிருவாகத்தினால் இடித்து அழிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தொடர் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். அத்தோடு, சில மாணவர்கள்உணவு தவிர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
மாணவர்களின் போராட்டத்திற்கு உலகின் பல இடங்களில் இருந்தும் ஆதரவு பெருகியது.
இதனையடுத்து, கடந்த 11ஆம் திகதி, தூபி இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் தூபி அமைப்பற்கு மாணவர்களின் பங்குபற்றலோடு துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராசாவினால் அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து இடித்து அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீண்டும் அமைப்பதற்கு நிதி உதவியினை வழங்குமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று முன்தினம் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபிக்கான அத்திவாரம் வெட்டும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.