புதிய விமானப்படை தளபதிக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு
In இலங்கை November 10, 2020 4:19 am GMT 0 Comments 1555 by : Yuganthini

புதிய விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பதிரனவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு விஜேராமவிலுள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது.
18ஆவது விமானப்படை தளபதியாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து எயார் மார்ஷல் சுதர்ஷன பதிரன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து, தனது சேவை குறித்து கலந்துரையாடினார்.
இதன்போது, புதிய விமானப்படை தளபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர், நாட்டின் பாதுகாப்பு மற்றும் விமானப்படையின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.
இவ்வுலகத்திற்கு ஏற்றவகையில் இலங்கை விமானப்படையை முன்னேற்ற பாதையில் நகர்த்துதல் மற்றும் தேசிய பொறுப்புகளை நிறைவேற்றுதல் குறித்து புதிய விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பதிரன நம்பிக்கை வெளியிட்டார்.
முழு உலகிற்கும் அச்சுறுத்தலாகியுள்ள கொவிட்-19 தொற்று நிலையிலிருந்து இலங்கை மக்களை விடுவிப்பதற்காக இலங்கை விமானப்படை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் இதன்போது பாராட்டினார்.
18ஆவது விமானப்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள எயார் மார்ஷல் சுதர்ஷன பதிரன, முப்பது ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான மனிதாபிமான நடவடிக்கைக்கு போர் படைகளை இயக்குவதில் அவர் முக்கிய பங்களிப்பு செய்தார்.
1990ஆம் ஆண்டு சுப்பர் சொனிக் எஃப்-7 மற்றும் 1995ஆம் ஆண்டு கஃபீர் ஜெட் விமானத்தை இலங்கைக்கு கொண்டு வந்த விமானியும், கஃபீர் விமான படைப்பிரிவின் கட்டளை அதிகாரியுமான சுதர்ஷன பதிரன, பிரிவினைவாத பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அவர் ஆற்றிய பங்களிப்புக்காக வீர விக்ரம விபூஷண பதக்கத்தையும் மற்றும் ரண விக்ரம பதக்கத்தையும் தலா இரண்டு முறைகளும், ரண ஷுர பதக்கத்தை நான்கு முறையும் தனதாக்கிக் கொண்டுள்ளார்.
எயார் மார்ஷல் சுதர்ஷன பதிரன, கண்டி தர்மராஜ கல்லூரியின் புகழ்பெற்ற பழைய மாணவர் ஆவார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.