புது அவதாரம் எடுத்துள்ள அமலாபால்

‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அமலா பால், தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் வலம் வருகிறார்.
‘மைனா’ படத்தில் நடித்து பெரும் புகழை பெற்ற அவர் தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார்.
சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் இல்லாததால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி ஒளிப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிடுவதையே முழுநேர வேலையாக வைத்திருந்த அமலாபால் தற்போது தயாரிப்பாளராக புது அவதாரம் எடுத்துள்ளார்.
அந்த வகையில் ‘கடவர்’ என்ற திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் தயாராகவுள்ளது. இப்படத்தில் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார் அமலாபால். தீடீரென தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தமை குறித்து அவரிடம் கேட்டபோது,
“’கடவர்’ கதையை கேட்டேன். இதுவரை நாம் பார்த்திராத மற்றும் கேட்டிராத பல புதிய விஷயங்களை கொண்ட வித்தியாசமான திரைக்கதையாக இருந்தது. கேரளாவில் பிரபலமான வைத்தியர் உமா டத்தனால் எழுதப்பட்ட ‘ஒரு பொலிஸ் சர்ஜூனோடே ஓர்மகுறிப்புகள்’ என்ற புத்தகத்தைத் தழுவி இப்படம் எடுக்கப்படவுள்ளது.
இதனை குறைந்த பட்ஜெட்டில் எடுக்க முடியாது. அதற்கு பல காரணங்கள் உள்ளது. ஒரு நடிகையாக பின்னால் இருந்து இந்த படத்தை ஆதரிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் என்னை இப்படத்தின் இணை தயாரிப்பாளராக இணைத்துக் கொண்டேன்” என்று அமலாபால் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.