புத்தனை துணைக்கு அழைத்து தன்னை நியாயப்படுத்துகிறார் இலங்கை ஜனாதிபதி – மனோ
In ஆசிரியர் தெரிவு February 4, 2021 8:26 am GMT 0 Comments 1616 by : Dhackshala

இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புத்தனை துணைக்கு அழைத்து தன்னை நியாயப்படுத்துகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஜனாதிபதியின் இன்றைய சுதந்திர தின உரையின் பிரதான சாராம்சத்தை கேட்டு பார்த்தால் இது தெளிவாக புரிகிறது.
தேடிப்பார்த்ததில் அவரது சிந்தனயில் உள்ள நான்கு முத்தான விடயங்களை உதிர்த்துள்ளார் என தெரிய வருகிறது.
நாம் பல இன மொழி மத மக்கள் சகவாழ்வு வாழும் சுபீட்சமான இலங்கை ராஜ்யத்தை கட்டி எழுப்ப முயல்கிறோம்.
ஜனாதிபதி, இலங்கையை அல்ல, சிங்கள பெளத்த இராஜ்யத்தையே தான் கட்டியெழுப்ப புறப்பட்டுள்ளதாக தெளிவுபட கூறிவிட்டார்.
உண்மையில் தனது இலக்கை ஒளிவு மறைவு இல்லாமல் தெளிவாக உள்ளதை உள்ளபடி கூறியமையையிட்டு நான் ஜனாதிபதியை பாராட்டுகிறேன்.
அவரது இலக்கை நாம் ஏற்க மறுக்கிறோம் என்பது வேறு விஷயம். ஆனால் அவர் ஒளிந்து விளையாடவில்லை அல்லவா?
உலகத்துக்கு ஜனாதிபதி ஏதோ சொல்ல வருகிறார். அது என்ன என குழப்பிக்கொள்ள வேண்டாம். அவர் பின்வரும் நான்கு கருத்துகளைதான் தெளிவாக கூறுகிறார்.
(01) நீங்கள் தேடிய தலைவன் நான்தான்.
(02) நான் ஒரு சிங்கள பெளத்த தலைவன். இதை சொல்ல நான் ஒருபோதும் தயங்க போவதில்லை.
(03) பெளத்த படிப்பினைகளின் அடிப்படைகளிலேயே நான் இந்நாட்டை ஆளுவேன்.
(04) நாட்டின் சட்ட வரையறைக்குள் எல்லா இன, மதத்தவருக்கும் சுதந்திரமும் சமத்துவமும் பெற்று சமாதான சகவாழ்வு வாழ பெளத்த தத்துவத்துக்குள்ளே உரிமையுண்டு” என பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.