பெருவின் முன்னாள் ஜனாதிபதி அலன் கார்சியா தன்னைத் தானே சுட்டுக்கொண்டார்

பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலன் கார்சியா தன்னைத் தானே சுட்டுக்கொண்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தலையில் குண்டு பாய்ந்துள்ள நிலையில் தலைநகர் லீமாவிலுள்ள காசிமிரோ உல்லோவா மருத்துவமனையில் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பிரேசிலியக் கட்டுமான நிறுவனமான Odebrecht இடமிருந்து கையூட்டுப்பெற்றதாக அலன் கார்சியா குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். குறித்த குற்றச்சாட்டுத் தொடர்பாக அவரைக் கைதுசெய்ய பொலிஸார் சென்றவேளையிலேயே அவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் பெருவின் முன்னாள் ஜனாதிபதி அலன் கார்சியா குறித்த இந்தக் குற்றச்சாட்டினை மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி அலன் கார்சியா அங்கம் வகிக்கும் அப்ரிஸ்ரா (Aprista) கட்சியின் தலைவர் லூயிஸ் கொன்சலா போசடா இந்தச்சம்பவம் பற்றித் தெரிவிக்கையில் கார்சியாவின் நிலை தற்போது மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவித்தார்.
1985 – 1990 மற்றும் 2006 – 2011 என இரண்டு தடவைகள் பெரு நாட்டின் ஜனாதிபதியாக அலன் கார்சியா இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.