பேசியதென் பேனா….
March 27, 2018 8:30 am GMT
காகிதம் கிழித்தேன்
கவிதை எழுத – தன்
கருநீல மழையை
கசிய மறுத்ததென் பேனா
நான் சற்று பதறினேன்
ஏனென்று கேட்டேன்
என்னை எழுது
என்னை எழுதென
இருவரி பதிலோடு; மீண்டும்
இருகிக் கொண்டதென் பேனா
உனக்கொரு கவிதை
உறுதியாய் தருவேன்
எனக்கு நீ உதவென
எடுத்து நான் இயம்பினேன்
பெருமூச்செறிந்ததென் பேனா
பின்; தொடர்ந்தது
நானென்றால் நானல்ல
நானொன்றும் பொருளல்ல
சிதறும் மனிதம் சீராக்க
கதறும் மனிதர் கண்ணீர் போக்க
புரட்சிக்காரர்களுக்கு புத்தி சொல்ல
பூக்காரிகளின் புதுமைகள் சொல்ல
நித்தம் நித்தம் நில்லாமல் ஓடும்
என் உழைப்பை எழுது!
காதலர்க்கு வாழ்வு கொடுக்க
கலைஞர்கள் கையில்
வாள் கொடுக்க
இயற்கை தாயின் அழிவு தடுக்க
இனியும் தமிழை பழிப்பது தடுக்க
உறங்காமல் உதிரம் பாய்ச்சும்
என் தியாகம் எழுது!
முள் என்றால் மூர்க்கம் எனும்
மூடத்தை தோலுரித்து
கூரெனும் போர்வாளால்- புது
குவலயம் படைக்க
பாரெல்லாம் பரந்தாளும்
என் ஆற்றல் எழுது!
நானென்றால் நானல்ல
நானொன்றும் பொருளல்ல!
மூச்சடக்கி பேசிப்பெரும்
முரசறைந்ததென் பேனா
காற்றடக்கி காகிதத்தில்
பெயர்வைத்தேன் கவிதைக்கு
“பேசியதென் பேனா”
-
என்ன தேடுகின்றாய்…
வண்ணத்துப் பூச்சியே நித்தமும் சுழன்று சுழன்று என்ன...
-
யாசகன்
மௌனத்துக்கு அனுமதியில்லை எனக்கும் அவளுக்குமான பயணங...