பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரின் விடுதலைக்கு தி.மு.க தொடர்ந்து குரல் கொடுக்கும்- கனிமொழி
In இந்தியா November 29, 2020 4:03 am GMT 0 Comments 1453 by : Yuganthini

பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரின் விடுதலைக்கு தி.மு.க தொடர்ந்து குரல் கொடுக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கனிமொழி மேலும் கூறியுள்ளதாவது, “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற தேர்தல் பரப்புரை பிரச்சாரத்தை, இன்று (ஞாயிற்றுக்கிழமை) எடப்பாடியில் தொடங்க உள்ளேன்.
மேலும், தி.மு.க.தேர்தல் அறிக்கை கூட்டத்தில் அடுத்த முறை நிச்சயமாக பங்கேற்பேன். தமிழகத்திற்கு நிவர் புயல் நிவாரண தொகையையும், ஏற்கனவே நிலுவையில் உள்ள நிவாரண தொகையையும் சேர்த்து மத்திய அரசிடம் இருந்து தமிழக முதலமைச்சர் பெற்றால் மகிழ்ச்சிதான்.
சென்னையில் கடந்த முறை மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டபோது, எந்தவித முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காதது போல இந்த முறையும் மக்களை பாதுகாக்க தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அனைத்து துறைகளிலும் முதலிடம் என கூறும் தமிழக அரசால் ஒரு வேலை வாய்ப்பை கூட உருவாக்க முடியவில்லை. இந்த நிலையில் தமிழக அரசு எதில் முதலிடம் என தெரியவில்லை. நிவர் புயலின்போது தமிழக அரசு எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காததால் தான், நிவர் புயல் தனது சீற்றத்தை குறைத்து கொண்டதோ? என எண்ண தோன்றுகிறது.
இதேவேளை பேரறிவாளன் உள்ளிட்ட 7பேரின் விடுதலைக்கு தி.மு.க.தொடர்ந்து குரல் கொடுக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.