பைசருடன் பேச்சுவார்த்தையில் இலங்கை அரசாங்கம்….!
In ஆசிரியர் தெரிவு December 29, 2020 7:15 am GMT 0 Comments 1649 by : Jeyachandran Vithushan
தனியார் நிறுவனம் ஒன்று உதவி புரிவதாக அறிவித்ததை அடுத்து கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள பைசர் மற்றும் அஸ்ட்ராஜெனெகாவுடன் இலங்கை அரசாங்கம் பேச்சு நடத்தி வருகிறது.
இலங்கையில் பைசர் மற்றும் அஸ்ட்ராஜெனெகாவின் முகவரான ஹேமாஸ் பர்மாசூட்டிகல்ஸ், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள குறித்த நிறுவங்களுடனும் சுகாதார அமைச்சுடனும் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
அத்தோடு தடுப்பூசி வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கான சிறந்த வழி குறித்து அரசாங்கத்திடம் ஒரு திட்டமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் தடுப்பூசிக்கான விலை, தேவையான அளவு மற்றும் வழங்குவதற்கான திகதி ஆகியவை குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு இந்த தடுப்பூசியை இலங்கைக்கு இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அதிகாரம் வழங்கப்படாததால், தடுப்பூசியை சொந்தமாக இறக்குமதி செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து திட்டங்களும் சரியாக நடந்தால், அடுத்த வருடம் இரண்டாவது அல்லது மூன்றாவது காலாண்டில் இலங்கைக்கு தடுப்பூசி வழங்க முடியும் என எதிர்பார்ப்பதாகவும் ஹேமாஸ் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொரோனா வைரஸுக்கு தடுப்பூசியை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் ரஷ்யா, சீனா மற்றும் உலக சுகாதார அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.