பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான பேராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரும் மனு ஒத்திவைப்பு
In இலங்கை February 4, 2021 4:27 am GMT 0 Comments 1657 by : Dhackshala

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் ஆரம்பமாகியுள்ள நிலையில் அதற்குத் தடை கோரி சுன்னாகம் பொலிஸார் தாக்கல் செய்த தடை உத்தரவு விண்ணப்பம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பொதுத் தொல்லையை ஏற்படுத்தல், கோவிட் -19 சுகாதார நடைமுறைகளை மீறுதல் உள்ளிட்ட சட்ட ஏற்பாடுகளின் கீழ் இந்த விண்ணப்பம் சுன்னாகம் பொலிஸாரால் நேற்று மாலை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த விண்ணப்பம் மல்லாகம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா முன்னிலையில் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.
இதன்போது போராட்டங்கள் நடத்தப்படுவதால் கோவிட் -19 சுகாதார நடைமுறைகள் மீறப்படுகின்றனவா? என்பது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு போறுப்பான சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிக்கையைப் பெற்று நாளை வெள்ளிக்கிழமை சமர்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன், அச்சுவேலி மற்றும் காங்கேசன்துறை பொலிஸார் தாக்கல் செய்த தடை உத்தரவு விண்ணப்பங்களையும் நாளை பரிசீலனைக்கு எடுக்கவும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் தவணையிட்டது.
தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உட்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறைபடுத்த கோரியும் மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தக் கோரியும் முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கைகளை மதிக்கக் கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்தப் போராட்டம் நேற்று காலை பொத்துவிலில் ஆரம்பமாகி பொலிஸாரின் தடையை மீறி நடைபெற்றுவருகிறது.
அத்துடன், எதிர்வரும் 6ஆம் திகதி சனிக்கிழமை பொலிகண்டியை சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.