பொத்துவில்- பொலிகண்டி வரையிலான பேரணி: வாக்குமூலம் பெற நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளருக்கும் அழைப்பு
In இலங்கை February 19, 2021 6:28 am GMT 0 Comments 1171 by : Yuganthini

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தினால்,வாக்கு மூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதி தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக திருச்செல்வம் பரஞ்சோதி மேலும் கூறியுள்ளதாவது, “பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்ற காரணத்தினால் வாக்கு மூலம் ஒன்றை பெற்றுக்கொள்ள, முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தருமாறு கோரி, நேற்று (வியாழக்கிழமை) மாலை 2.30 மணியளவில் முருங்கன் பொலிஸார் நானாட்டானில் உள்ள எனது வீட்டிற்கு வருகை தந்திருந்தனர்.
அதாவது, இன்று மாலை 3 மணியளவில், முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு என்னை வருகை தருமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
எனினும் பிரிதொரு நிகழ்வு இருந்தமையினால், திடீர் அழைப்பின் காரணமாக என்னால் உடனடியாக முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு செல்ல முடியாத நிலைமை காணப்படுகின்றது.
ஆகவே நாளை மாலை, முருங்கன் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று வாக்கு மூலம் வழங்க உள்ளேன். மக்களின் பிரதிநிதி என்ற வகையில் மக்களின் உரிமைக்காக இடம்பெற்ற குறித்த பேரணியில் கலந்து கொண்டு எனது ஒத்துழைப்பை வழங்கினேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.