UPDATE: பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டம் – 2ஆம் நாள் பயணம் ஆரம்பம்
In ஆசிரியர் தெரிவு February 4, 2021 3:43 am GMT 0 Comments 1724 by : Dhackshala

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தின் 2ஆம் நாள் பயணம் மட்டக்களப்பில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.
நேற்றைய போராட்டம் மட்டக்களப்பு தாழங்குடாவில் முடிவடைந்தது. இந்த நிலையில், இன்று காலை 8.30 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து போராட்டம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.
காத்தான்குடி, மட்டக்களப்பு நகரம், ஓட்டமாவடி, செங்கலடி என நீளும் போராட்டம் திருகோணமலையை அடைந்து, அங்கிருந்து கொக்கிளாய் ஊடாக இன்று மாலை முல்லைத்தீவு நகரத்தை அடையவுள்ளது.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டம் இன்றும் தொடர்கிறது
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டம் இன்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பு தாழங்குடாவில் ஆரம்பமாகி முல்லைத்தீவை நோக்கி செல்லவுள்ளது.
மழைக்கு மத்தியில் நேற்று முற்பகல் 9 மணியளவில் ஆரம்பமான இந்த போராட்டத்தில் சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், வடக்கு, கிழக்கைச் சேர்ந்த பல தமிழ் அரசியல் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.
முன்னதாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த பொலிஸ் துறைகள் ஊடாக இப்போராட்டத்தில் கலந்துகொள்ளும் மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு நீதிமன்றத் தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது.
இந்த போராட்டம் நடைபெற்றபோது நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு பல இடங்களில் தடையுத்தரவுகளை வழங்க பொலிஸார் முயற்சிகளை மேற்கொண்டபோது அவற்றினை புறந்தள்ளி போராட்டத்தில் பங்குகொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
எனினும் நீதிமன்ற தடை உத்தரவுக்கு மத்தியிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை தொடர்ந்தும் நடைபெறவுள்ளது.
அரசியல் கைதிகளின் விடுதலை, பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்கல், காணிவிடுவிப்பு, அத்துமீறிய குயேற்றம், நிரந்தர அரசியல் தீர்வு, முஸ்லிம்களின் மத உரிமைகளுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட பல விடயங்களுக்கு நிரந்தரத் தீர்வை கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.