பொலன்னறுவையில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்க நடவடிக்கை
In இலங்கை November 16, 2020 3:30 am GMT 0 Comments 1403 by : Yuganthini

பொலன்னறுவை- கல்லேல்ல பிரதேசத்தில் 700 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள கமத்தொழில் பொருளாதார மத்திய நிலையமொன்று ஸ்தாபிக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை மாவட்ட செயலக காரியாலயத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற வாழ்வாதார அபிவிருத்திக் குழு கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரின் வழிநடத்தலில் செயற்படுத்தப்படும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்திற்கு ஏற்ப இந்த வாழ்வாதார அபிவிருத்தி குழு கூட்டம் நேற்று இடம்பெற்றது.
பொலன்னறுவையை சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்வதற்காக இதுவரை கலாசார அமைச்சு,தொல்பொருள் திணைக்களம் மற்றும் மத்திய கலாசார நிதியத்துடன் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை இணைந்து இதுவரை வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. இதற்கு மேலதிகமாக சுற்றுலா ஹோட்டல் பாடசாலையொன்றை பொலன்னறுவை மாவட்டத்தில் அடுத்த ஆண்டுக்குள் ஆரம்பிப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
அதற்கு மேலதிகமாக பொலன்னறுவை மாவட்டத்தில் வனஜீவராசிகள் வலயத்தை அண்மித்த பகுதியில் சூழலுக்கு பாதுகாப்பான சுற்றுலா திட்டங்களை செயற்படுத்துவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
அதற்கமைய பொலன்னறுவை மாவட்டத்தில் நீர்ப்பாசன சுற்றுலா திட்டத்தை மேம்படுத்துவதற்கும் மாதுறுஓய, சோமாவதி மற்றும் வாஸ்கமுவ ஆகிய வனப்பகுதிகளை அண்மித்து சுற்றாடல் பாதுகாப்பான திட்டங்களை எதிர்காலத்தில் செயற்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள விவசாயிகளின் ஓய்வூதியத் திட்டம் ஜனவரி முதலாம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
இந்த ஓய்வூதிய திட்டம் 2010 இல் நிறுத்தப்பட்டது. மேலும், 2014 முதல் இடைநீக்கம் செய்யப்பட்ட வாழ்க்கைத் துணைவர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மாவட்டத்தில் நெல் சாகுபடியை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
துணை உணவுப் பயிர்கள், காய்கறிகள் மற்றும் பழங்களுக்கான காப்பீட்டுத் திட்டமொன்றை அறிமுக்கப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.
பொலன்னறுவை கல்லேல்ல பிரதேசத்தில் கமத்தொழில் பொருளாதார மத்திய நிலையமொன்று ஸ்தாபிக்கப்படும். அதற்காக செலவாகும் நிதி 700 மில்லியன் ரூபாயாகும். அடுத்த ஆண்டு பொலன்னறுவை மாவட்டத்தில் நெல் கொள்வனவை முறைப்படுத்துவது குறித்து நீண்ட விவாதம் நடைபெற்றது. அடுத்த ஆண்டுக்குள் 300,000 மெட்ரிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
உர மானியம் பெறும் விவசாயிகளிடமிருந்து ஒரு ஹெக்டேருக்கு 1000 கிலோ நெல் கொள்வனது செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் நெல்லை விற்பனை செய்யாத விவசாயிகளுக்கு உர மானியம் வழங்கக்கூடாது என்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அடுத்த ஆண்டு முதல் உரம் மற்றும் மரக்கறிகளை புகையிரதத்தின் மூலம் போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் ரயில்வே திணைக்களத்துடன் இணைந்து விசேட வேலைத்திட்டமொன்று இதுவரை தயாரிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் குறிப்பிட்டார்.
பொலன்னறுவை மாவட்டத்தில் காட்டு யானைகளின் பிரச்சினைகளை குறைப்பது தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. அதற்கான ஒதுக்கீடுகளை பெற்றுக் கொடுப்பதற்கு கமத்தொழில் அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டது.
குறித்த சந்தர்ப்பத்தில் இராஜாங்க அமைச்சர்களான ரொஷான் ரணசிங்க, ஷெஹான் சேமசிங்க, டீ.பீ.ஹேரத் மொஹான் டி சில்வா, விமலவீர திசாநாயக்க, சிறிபால கம்லத், மாவட்ட செயலாளர் டப்ளிவ்.ஏ.தர்மசிறி, வட.மத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், அனைத்து பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.