போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களை ஒடுக்க புதிய சட்டத்தை கையிலெடுத்த தாய்லாந்து பொலிஸார்!

மன்னராட்சியை முடிவுக்கு கொண்டுவரும் போராட்டத்தில் தீவிரம் காட்டிவரும் மாணவர்களை, ஒடுக்குவதற்கான பிரம்மாஸ்திரமாக தாய்லாந்து பொலிஸார், ‘லெஸ் மஜாஸ்ட்டே’ எனும் சட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
லெஸ் மஜாஸ்ட்டே எனும் இந்த சட்டத்தின்படி அரச குடும்பத்தை எதிர்த்து யார் எந்த கருத்தை சொன்னாலும், அவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
அரச குடும்பத்தினர் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமின்றி யார் வேண்டுமானாலும் இந்த சட்டத்தின்கீழ் ஒருவர் மீது புகார் பதிவு செய்யலாம். எனவே பெரும்பாலும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இந்த சட்டம் கடந்த சில ஆண்டுகளாக புழக்கத்தில் இல்லாமல் இருந்து வந்தது.
இந்த சட்டத்தின் பயன்பாட்டை காண விரும்பவில்லை என மன்னர் மகா வஜிரலோங்க்கோர்ன் அரசாங்கத்துக்கு அறிவித்த பின்னர் கடந்த 3 ஆண்டுகளாக இந்த சட்டத்தின்கீழ் யார் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்படாமல் இருந்தது.
இந்த சூழலில்தான் மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக இந்த சட்டத்தை பொலிஸார் கையில் எடுத்துள்ளனர்.
அதன்படி மாணவர்கள் போராட்டக்குழுக்களின் தலைவர்கள் 12பேர் மீது லெஸ் மஜாஸ்ட்டே சட்டத்தின் கீழ் மன்னராட்சியை இழிவுபடுத்தியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக இந்த தலைவர்கள் 12 பேருக்கும் பொலிஸார், அழைப்பாணை அனுப்பியுள்ளனர். இதில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.