மகாத்மா காந்தியின் 73ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது
In இலங்கை January 30, 2021 6:07 am GMT 0 Comments 1419 by : Yuganthini
மகாத்மா காந்தியின் 73ஆவது நினைவு தினம், யாழ்ப்பாணத்தில் இன்று (சனிக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக உள்ள அவரது உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் இந்தியத் துணைதூதரகத்தின் ஏற்பாட்டில் இந்த அஞ்சலி நிகழ்வு இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் இந்திய துணைத் தூதுவர் கே.பாலசந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மகாத்மா காந்தி என்று அழைக்கப்படும் மோகன்தாஸ் காந்தி 1869ஆம் ஆண்டு ஒக்டோபர் 2ஆம் திகதி குஜராத் மாநிலம் போர்ப்பந்தரில் கரம்சந்த் காந்தி-புத்லிபாய் தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.
இந்தியாவின் விடுதலைக்காக வித்திட்ட முக்கியத் தலைவர்களில் இவருடைய பெயர்தான் முதன்மையாக உச்சரிக்கப்பட்டது.
இந்திய விடுதலை போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக அவர் விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை என அனைவராலும் அழைக்கப்படுகிறார்.
சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம், இந்திய நாட்டு விடுதலைக்கு வழிவகுத்ததுடன் ஏனைய சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
அகிம்சை முறையில் போராடிய மகாத்மா காந்தி 1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி, புதுடெல்லி பிர்லா மாளிகை காந்தி சமிதி தோட்டத்தில் நாதுராம் கோட்ஸே ஆல், சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது. இவரது நினைவு நாளை தியாகிகள் தினமாக போற்றுகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.