வடக்கு, கிழக்கு பகுதிகளில் காணப்படும் வீதிப்பிரச்சினைகள், அம்மக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிப்பதாக அமைந்துள்ளது.
அந்தவகையில், யாழ்ப்பாணம் நெடுங்குளம் வீதி நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாத நிலையில் காணப்படுவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதியின் ஊடகாக 350இற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் போக்குவரத்து செய்கின்றனர்.
இரு வாகனங்கள் ஒரே நேரத்தில் சென்றால், ஒன்றையொன்று முந்திச் செல்ல முடியாத அளவிற்கு குறுகி இந்த வீதி காணப்படுகிறது.
இதனை புனரமைப்பு செய்து தருமாறு கோரிக்கை விடுத்தும் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
குறிப்பாக யாழ்.மாநகரசபை துணை மேயர் ஈசனிடம் மகஜர் கையளிக்கப்பட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக யாழ். மாநகர சபை துணை மேயர் ஈசனை தொடர்புகொண்டோம். இவ்வீதியை புனரமைப்புச் செய்வதற்கான திட்டத்திற்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் அனுமதி வழங்கியதாகவும் மாவட்ட செயலகத்தின் ஊடாக விரைவில் இந்த வீதி புனரமைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்றும் உறுதியளித்தார். மாவட்ட செயலகம் இதனை விரைவில் ஆரம்பிக்குமா? தொடர்ந்தும் அவதானிப்போம்.