மட்டக்களப்பில் ‘சிறுவர்களைக் காப்போம்’ தேசிய நிகழ்ச்சித் திட்ட செயலமர்வு

மட்டக்களப்பில் ‘சிறுவர்களைக் காப்போம்’ தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் செயலமர்வு இடம்பெற்றது.
“சிறுவர்களைக் காப்போம்” என்ற தேசிய எண்ணக்கருவிற்கு அமைவாக ஜனாதிபதி செயலகத்தினால் “எதிர்காலத்தை வெற்றிகொள்ளும் பிள்ளைகள்” என்ற தொனிப்பொருளில் இந்த ஆளுமை விருத்தி செயலமர்வு இடம்பெற்றது.
குறித்த செயலமர்வு, மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
சிறுவர்களை போதைப்பொருள் பாவனைகளில் இருந்து காப்பாற்றுதல், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எதிர்காலத்தை இலகுவாக்கிக் கொள்ளுதல், சிறுவர்களின் தேவைகளை அறிந்து அவற்றை வழங்குதல் மற்றும் உள ரீதியாக சிறுவர்களைப் பாதுகாத்தல் போன்ற பல விடயங்கள் குறித்து இதன்போது விரிவுரைகள் வழங்கப்பட்டன.
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், நாடாளுமன்ற உறுப்பினர்களான சதாசிவம் வியாழேந்திரன், சீனித்தம்பி யோகேஸ்வரன், மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார், மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம் மன்சூர், ஜனாதிபதி செயலக உதவிப் பணிப்பாளர் அருணிலி சோமரத்ன ஆகியோருடன் பாடசாலை அதிபர்கள், வலயக்கல்வி அலுவலர்கள், சிறுவர் குறித்த உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் “நாட்டிற்காக ஒன்றிணைவோம்” என்ற தேசிய திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் பல செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.