மட்டக்களப்பில் வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானம் – மாவட்ட அரசாங்க அதிபர்
In இலங்கை January 10, 2021 9:22 am GMT 0 Comments 1651 by : Dhackshala

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 14ஆம் திகதிவரை 4 தினங்களுக்கு அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்களைப் பூட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு 25 பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை திறக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
மாவட்ட அரசாங்க காரியாலயத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மாவட்ட கொரோனா செயலணிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நாளை அகில இலங்கை ரீதியாக பாடசாலைகள் திறப்பது சம்மந்தமாக ஏற்கனவே கல்வி அமைச்சு தீர்மானம் எடுத்துள்ளது.
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாக கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் உட்பட வலயக்கல்வி பணிப்பாளர்களை அழைத்து கூடியபோது அதற்கிணங்க தனிமைப்படுத்தப்பட்டுள்ள காத்தான்குடி பிரதேசத்திலுள்ள 25 பாடசாலைகளைத் தவிர ஏனைய அனைத்து பாடசாலைகளும் நாளை திங்கட்கிழமை கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும்.
எதிர்வரும் வாரம் பொங்கல் வாரமாக இருப்பதால் கடைகளில் அதிகமாக பொதுமக்கள் கூடுவதால் கொரோனா தொற்று ஏற்பட அதிகமான வாய்ப்புக்கள் இருக்கின்றது.
இதனடிப்படையில் இன்று ஞாயிற்றுக்கிழமையில் இருந்து எதிர்வரும் 14ஆம் திகதி வியாழக்கிழமை வரை பாமசி, குறோசறி, பொதுச்சந்தை, உணவகங்கள் ஆகிவற்றை தவிர்ந்த ஏனைய வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, உணவகங்களில் இருந்து சாப்பிட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், எடுத்துச் செல்ல மட்டும் அனுமதி வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை மீறுபவர்களுக்கு எதிராக குடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.