மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு
In இலங்கை January 19, 2021 6:23 am GMT 0 Comments 1664 by : Dhackshala

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களால் ஒருமணி நேர பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது.
அரச தாதியர் சங்கம், ஐக்கிய தாதியர் ஒன்றியம் என்பன இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தன.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள வைத்தியசாலை நிர்வாக கட்டடத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய தாதியர்கள் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு இந்தப் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் தாதியர் ஒருவர் கொரோனா நோயாளியாக இனங்காணப்பட்ட நிலையில், அவர் சிகிச்சைக்காக காத்தான்குடி வைத்தியசாலையிலுள்ள தாதியர்களுக்கான சிகிச்சைப் பிரிவிற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
இதன்போது அவரை அனுமதிப்பதற்கு காத்தான்குடி வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் மறுப்பு தெரிவித்ததன் காரணமாக அவர் பெரியகல்லாறு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் தாதியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுமிடத்து அவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலேயே ஒரு இடத்தினை ஒதுக்கி சிகிச்சை வழங்குமாறு வலியுறுத்தியும் கொரோனா சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதியர்களுக்கு விஷேட சலுகைகளை வழங்குமாறு வலியுறுத்தியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தமது கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்காவிட்டால் தொடர்ச்சியான பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவேண்டிய நிலையேற்படும் எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.