மட்டக்களப்பு மாநகர எல்லையில் வர்த்தக நிலையங்களுக்குப் பூட்டு!

மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குள் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூன்று நாட்களுக்கு மூடப்படுவதாக மாநகரசபை முதல்வர் தியாகராசா சரவணபவன் அறிவித்துள்ளார்.
இதன்படி, பலசரக்குக் கடைகள், மருந்தகங்கள், பழக்கடைகள், கோழிக்கடைகள், வெதுப்பகங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்துக் கடைகளும் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பூட்டப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாநகரசபையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “மட்டக்களப்பு நகரில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் அங்கு கடமையாற்றும் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 26 பேருக்கு கொரோனா தொற்றுதி கண்டறியப்பட்டது.
இதனடிப்படையில் குறித்த வர்த்தக நிலையங்களுக்கு வந்து சென்றவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையை சுகாதார அதிகாரிகள் முன்னெடுத்து வருவதால் வர்த்தக நிலையங்களை மூடி ஒத்துழைப்பு வழங்குமாறு சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
எனவே, சுகாதார அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என மாநகரசபை இன்று எடுத்த தீர்மானத்தின்படி எதிர்வரும் மூன்று தினங்களுக்கும் தொடர்ந்து வர்த்தக நிலையங்களை மூட முடிவு செய்துள்ளோம்.
இந்த அறிவித்தலை மீறுபவர்களுக்கு எதிராக மாநகரசபை கட்டளைச் சட்டத்தின் கீழும் கொரோனா சட்டத்தின் கீழும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.
அதேவேளை, வர்த்தக நிலையங்களைத் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளவர்கள் சுகாதாரத் திணைக்களத்தின் அறிவுறுத்தலைப் பின்பற்ற வேண்டும்.
இதேவேளை, மாநகரசபைப் பகுதியில் கொரோனா தொற்று வராமல் பாதுகாக்க அனைவரது ஒத்துழைப்பையும் நல்குமாறு கேட்டுக்கொள்வதுடன் நாளை நடக்கவிருக்கும் புதுவருட ஆராதனையில் பெரிய தேவாலயங்களில் 50 பேரும் சிறிய தேவாலயங்களில் 25 பேரும் அனுமதிக்கபடும் என்ற விதிமுறைகளைப் பின்பற்றி செயற்பட வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.