மட்டு.மாவட்டத்தில் கடந்த 24மணித்தியாலங்களில் 12கொரோனா தொற்றாளர்கள்!
In இலங்கை January 1, 2021 11:01 am GMT 0 Comments 1635 by : Yuganthini
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணித்தியாலங்களில் 12கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.
காத்தான்குடி தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்பு மாநகரிலுள்ள வர்த்தக நிலையங்களை மூன்று தினங்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் காத்தான்குடி பிரதேசமும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளமையினால், அப்பகுதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
மேலும், பொலிஸாரும் இராணுவத்தினரும் நகரின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதையும் காணமுடிகின்றது.
காத்தான்குடியின் இரு எல்லைப்பகுதிகளிலும் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து விசேட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். காத்தான்குடி பகுதியில் இருந்து வெளியேறுவோர் தொடர்பிலும் காத்தான்குடிக்குள் நுழைவோர் தொடர்பிலும் கண்காணிப்படுகின்றன.
இதேநேரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 1015பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக நா.மயூரன் மேலும் கூறியுள்ளதாவது, “மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணித்தியாலங்களில் 12 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இதில் களுவாஞ்சிகுடியை சேர்ந்த இருவரும் வாழைச்சேனை பகுதியில் ஒருவரும் காத்தான்குடி பகுதியில் மூவரும் ஓட்டமாவடி பகுதியில் ஆறு பேருமாக 12பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் காத்தான்குடி, மட்டக்களப்பு, ஏறாவூர் ஆகிய பகுதிகளில் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. காத்தான்குடி பகுதியில் 665பேர் சோதனைக்குட்படுத்தப்பட்டதில் 27பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியது. இதில் 23பேர் காத்தான்குடியை சேர்ந்தவர்கள்.மூவர் மட்டக்களப்பு பகுதியையும் ஒருவர் பட்டிப்பளை பகுதியையும் சேர்ந்தவர்கள்.
இதேபோன்று மட்டக்களப்பு சுகாதார பிரிவில் 549அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் 26 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதில் 23பேர் காத்தான்குடி பகுதியையும் இருவர் மட்டக்களப்பு பகுதியையும் ஒருவர் ஆரையம்பதியையும்சேர்ந்தவர்களாவர்.
இதனை தொடர்ந்து மாவட்ட கொரோனா செயலணி கலந்துரையாடி, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ஐந்து நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று மட்டக்களப்பு மாநகரத்துக்குள் உள்ள கடைகள் கதவடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் 1015பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இன்று காத்தான்குடி சுகாதார பிரிவில் 300அன்டிஜன் சோதனைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.