மதுரையில் தி.மு.க. செயலர் வெட்டிக்கொலை

மதுரையில் வாக்குச்சாவடி அருகே தி.மு.க. பகுதிச் செயலர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
6 பேர் கொண்ட கும்பல் செயலர் பாண்டியை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியது. அவர் நெஞ்சு உட்பட சுமார் 11 இடங்களில் சராமாரியாக வெட்டப்பட்டார்.
ஏற்கனவே தேர்தல் மற்றும் அரசியல் ரீதியாக முன் விரோதம் காரணமாகவே அவர் வெட்டப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இன்று (வியாழக்கிழமை) பாண்டி, தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தார். மதுரை, சிந்தாமணி நல்லமுத்து வீதியின் சந்தியருகில் தனது கூட்டணி கட்சியின் மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு வாக்குச் சேகரித்தார்.
அப்போது, திடீரென அவரின் அருகில் முச்சக்கரவண்டியிலிருந்து ஆயுதங்களுடன் இறங்கிய 6 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் பாண்டியை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியது.
தேர்தல் பணியிலிருந்த தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சியினர் அங்கு திரண்டனர். அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவர் வழியில் உயிரிழந்தார்.
வாக்குச்சாவடியில் இருந்து சுமார் 100 அடி தூரத்தில் நடந்த இச்சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க.வினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. பொலிஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.