மன்னாரில் இளைஞர் குழு அட்டகாசம்- பாதுகாப்பு கோரி நீதவான் வாசஸ்தலத்திற்கு முன் தஞ்சமடைந்த மக்கள்
In இலங்கை January 25, 2021 4:47 am GMT 0 Comments 1680 by : Yuganthini
மன்னார்- சாவக்கட்டு கிராமத்திற்குள் நுழைந்த இளைஞர் குழுவொன்று அங்குள்ள வீடுகளில் புகுந்து தாக்குதல் நடத்தியமையினால், தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரி அப்பிரதேச மக்கள், நீதவான் வாசஸ்தலத்திற்கு முன் தஞ்சமடைந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு சாவக்கட்டு கிராமத்திற்குள் நுழைந்த இளைஞர் குழுவொன்று அங்குள்ள வீடுகளினுள் அத்துமீறி நுழைந்து ஆண்கள், பெண்கள் மற்றும் வயோதிபர்கள் என அனைவர் மீதும் தாக்குதல் நடத்தி, தப்பிச்சென்றுள்ளனர்.
இதனையடுத்து அந்த கிராம மக்கள் தமக்கு பாதுகாப்பு வழங்க கோரி நேற்று இரவு 8 மணியளவில் மன்னார் மாவட்ட நீதவானின் வாசஸ்தலத்திற்கு முன் ஒன்று கூடி, போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சாவக்கட்டு கிராமத்திற்குள் நேற்று இரவு சுமார் 10 இற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிலில் முக்கவசம் மற்றும் தலைக்கவசம் அணிந்து, கூரிய ஆயுதங்களுடன் சென்ற இளைஞர் குழு, குறித்த கிராமத்திலுள்ள வீடுகளுக்குள் சென்று, அனைவர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் பெண் உட்பட இருவர் காயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த சம்பவத்தினால் அச்சமடைந்த கிராம மக்கள், ஒன்று சேர்ந்து நேற்று இரவு 8 மணியளவில், மன்னார் மாவட்ட நீதவானின் வாசஸ்தலத்திற்கு முன் ஒன்று கூடி, போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
தமக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறும் குறித்த நபர்களை கைது செய்யுமாறும் கோரிக்கை விடுத்தனர். இதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸார், மக்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாட்டை பதிவு செய்யுமாறு கோரி இருந்தனர். இந்நிலையில் அந்த மக்கள், மன்னார் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாட்டை மேற்கொண்டனர்.
அண்மையில் இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பொலிஸார் சிலரை கைது செய்து பிணையில் விடுவித்திருந்தனர்.
இந்த நிலையிலே குறித்த இளைஞர் குழு, நேற்று இரவு சாவட்கட்டு கிராமத்திற்குள் சென்று தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.