மன்னாரில் காணிகளை சுவீகரிக்கும் முயற்சி தோல்வி
In ஆசிரியர் தெரிவு April 19, 2019 6:07 am GMT 0 Comments 2602 by : Dhackshala
மன்னார் மாந்தை வெள்ளாங்குளம் பண்ணை பகுதியில் இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவிருந்த 275 ஏக்கர் பண்ணை நிலம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் முயற்சியினால் கைவிடப்பட்டுள்ளது.
குறித்த நிலத்தை நேற்று (வியாழக்கிழமை) பார்வையிட இலங்கை கஜு கூட்டுத்தாபன தவிசாளர் மற்றும் அதிகாரிகள் வந்திருந்தபோதே சுவீகரிக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள வெள்ளாங்குளம் பகுதியில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட வெள்ளாங்குளம் பண்ணை பகுதி நிலத்தில் 265 ஏக்கர் நிலம் கடந்த மாதம் மாந்தை பிரதேச செயளாலரிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
அதேநேரம் ஏனைய நிலம் வனவள திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த வெள்ளாங்குளம் பண்ணை நிலம் முழுவதும் கஜு மரங்கள் பயிர்செய்யப்பட்ட காரணத்தினால் குறித்த காணிகளை இராணுவத்தின் உதவியுடன் இலங்கை கஜு கூட்டுத்தாபனத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அதற்கமைய குறித்த காணிகளை பார்வையிடுவதற்காக இலங்கை கஜு கூட்டுத்தாபன தவிசாளர் மற்றும் அதிகாரிகள் நேற்று குறித்த பகுதிக்கு விஜயம் செய்திருந்தனர்.
இந்த நிலையில் இந்த விஜயத்தின்போது சம்பவ இடத்திற்கு வந்த வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், குறித்த 275 ஏக்கர் காணிகளும் மாந்தை பகுதியில் உள்ள பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் முன்னால் போராளிகளுக்கு வழங்குவதற்கென பிரதேச செயலகத்தினால் அடையாளப்படுத்தப்பட்டு பெயர் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அத்தோடு எந்த விதத்திலும் கஜு கூட்டுத்தாபனத்திற்கு குறித்த காணிகளை வழங்க முடியாது என்றும் தெரிவித்தார். கட்டாயத்தேவை இருப்பின் வனவள திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்ட 275 ஏக்கர் நிலத்திலும் கஜுமரங்கள் காணப்படுவதால் அரச அனுமதி பெற்று அக்காணிகளை கஜு கூட்டுதாபனத்தின் கீழ் கொண்டு வருமாறு கோரிக்கை விடுத்தார்.
மேலும் வெள்ளாங்குளம் பண்ணை பகுதிக்கு அருகில் உள்ள சுமார் 30 ஏக்கர் காணிகளை பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி கஜு கூட்டுதாபனத்திற்கு வழங்க அனுமதி பெற்றுத்தர முயற்சிப்பதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த 275 ஏக்கர் பண்ணை நிலத்தையும் கையகப்படுத்தும் முயற்சி கைவிடப்பட்டது.
இதன்போது மாந்தை மேற்கு பிரதேச செயலாளர், மன்னார் நகரசபை தவிசாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் அரச அதிகாரிகள் என பலர் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.