மன்னாரில் தேசிய துக்க தினம் அனுஸ்டிப்பு
In இலங்கை April 23, 2019 9:24 am GMT 0 Comments 2351 by : Yuganthini
உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மன்னாரில் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இன்று (செய்வாய்க்கிழமை) காலை 8.30 மணிக்கு 3 நிமிடம் மௌன அஞ்சலியை அனைவரும் செலுத்த வேண்டுமென அரசாங்கம் அறிவித்திருந்தது.
அதற்கமைய மன்னார் மாவட்டத்தில் தேசிய துக்க தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதோடு, அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் காலை 8.30 மணி முதல் 8.33 மணி வரையிலான மூன்று நிமிடங்கள் துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டு, மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் மற்றும் மாவட்டச் செயலக பணியாளர்களும் கலந்து கொண்டு மௌன அஞ்சலி செலுத்தினர்.
இதேவேளை மன்னார் மாவட்டத்திலுள்ள அரச மற்றும் தனியார் அலுவலகங்களிலும் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் மன்னார், பஸார் பகுதியிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதோடு, வர்த்தக நிலையங்களில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.
ஆனாலும் அரச மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவைகள் வழமை போன்று இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.