கொரோனா அச்சம் – மன்னாரில் 179 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்
In இலங்கை January 7, 2021 3:52 am GMT 0 Comments 1446 by : Dhackshala
மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த கிராமத்தில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 179 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற விசேட கலந்துரையாடலினைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர். பரிசோதனையின்போது மன்னார் மாவட்டத்தில் எருக்கலம்பிட்டி கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செயற்பட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட அனைத்து சுகாதார அதிகாரிகளும் எருக்கலம்பிட்டி கிராமத்திற்கு விஜயம் செய்து குறித்த கிராமத்தை சுய தனிமைப்படுத்தி மாலை 4.30 மணி வரை 200 பீ.சி.ஆர்.பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
குறித்த பி.சி.ஆர். பரிசோதனைகளின் முடிவுகள் இரண்டு தினங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அதனை தொடர்ந்தே மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.
மேலும் எருக்கலம்பிட்டி கிராமத்தில் 46 குடும்பங்களைச் சேர்ந்த 179 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பீ.சி.ஆர். பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.