மன்னார் மாவட்டத்தில் இதுவரை 182 கொரோனா தொற்றாளர்கள்!
மன்னார் மாவட்டத்தில் இதுவரை 182 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட தொற்று நோய் விஞ்ஞான பிரிவிற்கான வைத்திய அதிகாரி கதிர்காமநாதன் சுதாகர் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் தெரிவிக்கையில், “மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நாள் முதல் தற்போது வரை எட்டாயிரத்து 702 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவற்றில் தற்போது வரை 182 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரியில் மாத்திரம் 165 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், பெப்ரவரி தொடங்கி கடந்த இரண்டு நாட்களில் 75 பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை.
தற்போது, மன்னார் மாவட்டத்தின் பஸார் பகுதி பாதுகாப்பான பிரதேசமாகவும், அதில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படாததினால் மக்கள் அச்சம் இன்றி உரிய சகாதார நடைமுறைகளுக்கு அமைவாக நாளாந்த கடமைகளை மேற்கொள்ள முடியும்.
மேலும், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கொரோனா தொற்று தடுப்பு மருந்து ஏற்றும் நடவடிக்கை மன்னார் மாவட்டத்தில் சுகாதாரத் துறையினருக்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மன்னார் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட ஆயிரத்து 132 சுகாதாரப் பணியாளர்களில் 980 பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது” என்ற குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.