மயிலத்தமடு- மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு மனுவின் மீதான விசாரணை ஒத்திவைப்பு
In இலங்கை December 18, 2020 11:29 am GMT 0 Comments 1490 by : Yuganthini
மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேய்ச்சல் தரை அபகரிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதான விசாரணை தை மாதம் 22ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேய்ச்சல் தரை பகுதியில் அத்துமீறிய அபகரிப்பு தொடர்பில் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் கடந்த வாரம் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள கால்நடை பண்ணையாளர்களின் சார்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பண்ணையாளர்கள் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரத்தினவேல் தலைமையிலான சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.
இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி எம்.என்.அப்துல்லா தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் பிரதிவாதிகளாக மட்டக்களப்பு மாவட்ட காணி பிரிவுக்கு பொறுப்பான மேலதிக அரசாங்க அதிபர், ஏறாவூர்ப்பற்று, கிரான் ஆகிய பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், பொலிஸ் திணைக்களம், வனஇலாகா அதிகாரிகள் ஆகியோர் இன்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
இதன்போது பிரதிவாதிகளினால் மேலதிக விடயங்களை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் தேவையென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இன்றைய வழக்கில் மகாவலி திணைக்களமும் அத்துமீறி குடியேறியுள்ள இரண்டு பேரும் நீதிமன்றில் சமூகமளிக்கவில்லை.
ஆகவே, நீதிமன்றம் மீண்டும் இவர்களுக்கான அழைப்பானையை அனுப்பவும் இதன்போது பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து ஜனவரி மாதம் 22ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.