மருதனார் மடம் கொத்தணியின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
In இலங்கை December 15, 2020 4:16 am GMT 0 Comments 1720 by : Yuganthini
மருதனார் மடம் கொத்தணி தொற்றாளர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.
மருதனார்மடம் பொதுச்சந்தையில் கொரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடையோரிடம், கடந்த சனிக்கிழமை பெறப்பட்ட மாதிரிகளில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில், மேலும் 4பேருக்கு வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்தப் பி.சி.ஆர்.பரிசோதனை முடிவு, அநுராதபுரம் வைத்தியசாலை ஆய்வுகூடத்தினால் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது.
உடுவிலைச் சேர்ந்த 2 பேரும் தெல்லிப்பழை, சண்டிலிப்பாயைச் சேர்ந்த தலா ஒருவரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரும் மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரிகளாவர்.
இதற்கமைய மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43ஆக அதிகரித்துள்ளது.
அநுராதபுரம் வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இடம்பெற்ற பி.சி.ஆர்.பரிசோதனை அறிக்கை இன்று காலை வெளியாகியுள்ளது. மேலும் சில மாதிரிகளின் முடிவுகளும் எதிர்பார்க்கப்படுகிறது.
சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடுமுழுவதும் எழுமாறாக தெரிவு செய்யப்படுவோரிடம் பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதனடிப்படையில் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிப்பில் மருதனார்மடம் சந்தி முச்சக்கர வண்டி தரிப்பிடத்திலுள்ள சாரதிகளிடம் கடந்த புதன்கிழமை, மாதிரிகள் பெறப்பட்டு பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
அந்தப் பரிசோதனையின் முடிவில் மருதனார்மடம் பொதுச்சந்தை வியாபாரியாகவும் முச்சக்கர வண்டி சாரதியாகவும் உள்ள 38 வயதுடைய குடும்பத்தலைவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.
அதனையடுத்து அவர் கொவிட் 19 சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டார். அவரது குடும்பம், உடுவில் பிரதேச சபை ஒழுங்கையிலுள்ள அவர்களது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.
மறுநாள் அவர்களது குடும்பத்தினரிடம் பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முதலாவது தொற்றாளரின் மனைவி, இரண்டு மகள்கள், மகன், மாமியார் மற்றும் மைத்துனர் என 6பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
அதனை அடுத்து மருதனார் மட சந்தை வியாபாரிகள் உட்பட அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அதில் இதுவரைக்கும் 43பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.