மறைக்கப்பட்ட மனிதர்கள் எங்கே – மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைதி ஊர்வலம்!
சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று(வியாழக்கிழமை) மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளை கண்டு பிடித்து தரக்கோரி அமைதி ஊர்வலம் ஒன்றை முன்னெடுத்தனர்.
மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஏற்பாட்டில் குறித்த அமைதி ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அமைதி ஊர்வலமானது இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் டெலிகொம் சந்தியில் ஆரம்பமாகி மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் ஊடாக மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தது.
அதனைத் தொடர்ந்து மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்திற்கு முன் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் புகைப்படங்கள் மற்றும் பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ‘மறைக்கப்பட்ட மனிதர்கள் எங்கே’?, இராணுவத்திடம் ஒப்டைக்கப்பட்ட உறவுகள் எங்கே உள்ளிட்ட வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியாவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்தில் மன்னார் மாவட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் எஸ்.திலீபன், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.